செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கப் பெருமாள் கோவில் அரசுப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் புத்தகங்கள் எரிந்து நாசமாகின. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அனுமந்தபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள ராமானுஜம் பிளாக்கில், செங்கல்பட்டு கல்வி மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்களுக்கான கிடங்கு உள்ளது. கடந்த 2018-19-ம் ஆண்டு பழைய புத்தகங்கள் சுமார் 10 டன் அளவுக்கு இந்த கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து திடீரென புகை வெளியேறியது. அப்போது என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வில்லியம்ஸ் இதைக் கண்டார். அவர் உடனடியாக காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விபத்துக்கு மின்கசிவு காரணமா அல்லது சதிச்செயலா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நடைபெற்றதால் தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் தடுக்கப்பட்டது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
“இந்த புத்தகங்கள் அனைத்தும் 2018-19 ஆண்டுக்கான பழைய புத்தகங்கள். இவற்றை எடுத்துச் செல்லும்படி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அவர்கள் இன்னும் அப்புறப்படுத்தவில்லை” என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கற்பகம் தெரிவித்தார்.தீ அணைக்கப்பட்ட நிலையில் புகைமூட்டமாக காணப்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள அறை.
+ There are no comments
Add yours