அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் !

Spread the love

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்களை பணிநிரவல் செய்யவும், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப, மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல், அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் ஆகியவற்றுக்கு ஆய்வகங்கள் உள்ளன.

இந்த ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணி முக்கியமானதாகும். எனவே அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் அவசியமானதாக இருந்து வருகிறது.

அதற்கேற்ப மொத்தம் 6,397 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது 5,907 பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இதன்மூலம் 490 பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் தமிழக அரசுக்கு அனுப்பி இருந்த கருத்துருவை ஏற்று மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர உபரியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணியிடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கையை கொண்டு பணி நிரவல் செய்யவும், காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களுக்கான பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு நகராட்சி மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு, ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல், செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல், மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களைப் பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் நிதி உதவி மூலம், அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் பல்வேறு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், குறிப்பாக ரோபோட், முப்பரிமாண அச்சு உருவகங்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் தங்களது அறிவாற்றலைப் பயன்படுத்தி புதியன படைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வகங்கள் செயல்படுகின்றன.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் மெய்நிகர் வகுப்பறை 100 mbps இணைய வசதியுடன் மாணவர்கள் இணையவழிக் கல்வி அறிவைப் பெறவும், கற்றறிந்ததை மதிப்பீடு செய்து, அவர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் நோக்கத்தில் இணையவழித் தேர்வுகள் நடத்தவும், மாணவர்களுக்கு இணையவழிக் கலந்தலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியனவற்றிற்கு பயன்படுவதுடன், நவீன தொழில் நுட்பத்தின் வழிக் கற்றலையும், கற்றல் அடைவையும் உறுதிபடுத்தும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு (SIDP – School Innovation Development Project) திட்டத்தின் மூலம், மாணவர்கள் புதிய படைப்புகளுக்கு வழிகாட்டவும், பயிற்சி வழங்கவும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் பயன்படுவதுடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி விழிப்புணர்வு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் வழங்கவும் பயன்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு மனவெழுச்சி பயிற்சி, தனித்திறன் வளர்ச்சி வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.

இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிர்-வேதியியல் ஆகிய அறிவியல் பாடங்களின் பாடப் பொருள்சார் சோதனைகளை மேற்கொள்ளவும், பதப்படுத்தப்பட்ட மாதிரிகளை அறிந்துணர்தல், நழுவங்கள் மற்றும் மாதிரிகளை நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி உருப்பெருக்கம் செய்து ஆய்ந்தறிதல், மாணவர்கள் சோதனைகள் செய்து பார்த்தல், ஆசிரியர்கள் பாடப்பொருளைக் கற்பிக்கும் நோக்கில் செய்துகாட்டி விளக்குதல் (Demonstration) போன்ற செயல்பாடுகள் மூலம், மாணவர்கள் அறிவியல் கருத்துக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அறிவியல் ஆய்வகங்கள் பயன்படுகின்றன. அறிவியல் உபகரணங்களைக் கையாளுதல் மற்றும் துல்லிய அளவீடுகள் மேற்கொள்ளுதல், அன்றாட வாழ்வில் பயன்படும் அறிவியல் கருத்துக்களை செய்முறை மூலம் கற்றலை ஊக்குவித்தலை நோக்கமாகக் கொண்டு அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மொழி ஆய்வகங்கள் மாணவர்கள் மொழியின் நுட்பங்களை அறிந்துகொள்ளவும், முறையாக உச்சரித்தல் மற்றும் மொழிப் பயன்பாட்டு அறிவைப் பெறவும் காரணமாக அமைகின்றன. கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படைக் கூறுகளை செயல் வழியில் கற்றுணர்வதற்கு மொழியியல் ஆய்வக செயல்பாடுகள் துணை நிற்கின்றன.

தொழிற்கல்வி ஆய்வகங்கள் தொழிற்கல்வி பாடங்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளவும், பாடப்பொருள் சார் அறிவை செய்து கற்றல் மூலம் நேரடி அனுபவத்தைப் பெறவும் அடிப்படையாக அமைகின்றன.

கணித ஆய்வகங்கள் மாணவர்கள் கணிதவியலின் அடிப்படைக் கருத்துக்களை அறிந்துணரும் வகையில் நேரடி அனுபவங்களைப் பெறவும், கணிதவியல் கோட்பாடுகளை செயல் வழியில் நிறுவுதல், சூத்திரங்களை சரிபார்த்தல், நடைமுறை வாழ்வில் கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்துதல் போன்ற பன்முக செயல்பாடுகளுக்கு காரணமாக அமைகின்றன.

ஆய்வக செயல்பாடுகளின் மூலம் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை, அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த புதியன படைக்கும் திறன் ஆகியன மேம்படுவதற்கு, ஆய்வகங்கள் இன்றியமையாததாகும். மாணவர்கள் முறையாக ஆய்வகத்தில் பயிற்சிகள் மேற்கொள்வதும், கற்றல் மற்றும் செயல்திறனால், கற்பனை ஆற்றல் வளருவதும், புதிய கண்டுபிடிப்புகளை அடிப்படைக் கல்வி மூலம் உருவாக்கவும் ஆய்வகங்கள் பெரிதும் உதவுகின்றன.

இவ்வாறான நிலையில், பள்ளி ஆய்வகம் மற்றும் ஆய்வக உபகரணங்களை முறையாக பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவது ஆகியனவற்றில் ஆய்வக உதவியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. எனவே, ஆய்வக உதவியாளர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வகை ஆய்வகங்களையும் மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் முழுமையாக தொடர்புடைய பாட ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மாணவர்களின் ஆய்வக செயல்பாடுகளுக்குத் தேவையான உரிய முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வதுடன், ஆய்வகங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை முறையாக பாதுகாத்து பராமரித்திட வேண்டும்.

ஆய்வக உதவியாளர்கள் பணிகளைச் செய்வதற்கு ஆய்வகப் பணிகள் குறித்து தேவையான பயிற்சி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், பாடத்திட்டத்தின்படி ஆய்வக செயல்பாடுகள் முறையாக தொடர்ச்சியாக நடைபெறுவதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் இயங்கும், நகராட்சி, மாநகராட்சி கீழ், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரசு வரும் ஆய்வகங்களின் முக்கியத்துவம் கருதி, பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்கள், ஆய்வக பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திடும் வகையில், அவர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணியினை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours