இம்ரான் கானின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு !

Spread the love

தோஷகானா வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கராச்சி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான அவருக்கு எதிராக கடந்த ஆண்டு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தன.

அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அவரே காரணம் என கூறின. தொடர்ந்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வியை தழுவினார்.

இதனால், அவர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதன்பின்னர் ஷபாஸ் ஷெரீப் பிரதமரானதும், இம்ரான் கான் தனது பதவி காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவாகின. இதேபோன்று இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீபிக்கு எதிராகவும் தோஷகானா வழக்கு பதிவானது. அரசு துறைக்கு பரிசாக கிடைத்த சங்கிலி, காதணி, இரண்டு மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லட் உள்பட பல பொருட்களை பீபி தன்னுடன் வைத்து கொண்டார்.

அவர் தங்கம், வைரங்கள், நெக்லஸ் மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றையும் வைத்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவற்றின் விலை மதிப்பை கணக்கிட அரசு துறையிடம் அவை ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பீபிக்கு எதிரான தோஷகானா வழக்கு, மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பூஷ்ரா பீபியின் இடைக்கால ஜாமீன் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி ஆஜராகி, பூஷ்ரா பீபியை கைது செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரினார். பூஷ்ராவின் ஆடியோ பதிவு, மத்திய புலனாய்வு முகமைக்கு தடய அறிவியல் பரிசோதனைக்காக முன்பே அனுப்பப்பட்டு விட்டது என்றும் கூறினார்.

எனினும், பூஷ்ராவின் வழக்கறிஞர் சப்தார் கோர்ட்டில் கூறும்போது, விசாரணை அதிகாரிகள் பூஷ்ராவை அழைத்து மணிக்கணக்கில் விசாரணை என கூறி அமர வைத்தனர். ஆனால், பூஷ்ராவோ விசாரணையில் உள்ள ஆடியோ தன்னுடையது அல்ல என முன்பே கூறி விட்டார் என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆடியோவுடன் பூஷ்ராவின் குரல் சரியாக இருக்கின்றதா? என பதிலளிக்க விசாரணை அதிகாரி நேரம் கேட்டதற்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours