ரஷ்யாவில் அதன் அதிபர் விளாதிமிர் புதினை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதன் மூலம் ஆயுத தளவாடங்களை ரஷ்யாவுக்கு அதிகளவில் வடகொரியா வழங்கவிருப்பதால், அடுத்த சில வாரங்களில் உக்ரைன் போர் உக்கிரமடையும் எனத் தெரிகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரபூர்வ பயணமாக நேற்று ரஷ்யாவுக்கு கிளம்பிச் சென்றார். தனது பிரத்யேக பச்சை நிற ரயிலில் ரஷ்யாவுக்கு நேற்று கிம் ஜாங் உன் கிளம்பிச் சென்றதை தென்கொரிய ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இன்று அதிபர் புதினை சந்திக்கும் கிம் ஜான், ரஷ்யாவின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப் பயணமும் மேற்கொள்கிறார். புதின் உடனான சந்திப்பில், வடகொரியாவின் ஆயுத தளவாடங்களை ரஷ்யா அதிகளவில் கொள்முதல் செய்ய இருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒன்றரை ஆண்டுகளைத் தாண்டி தொடர்ந்து வருகிறது. மேற்கு நாடுகள் ஆதரவால் ரஷ்யாவை வீரியமுடன் உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. மேற்கு நாடுகளின் ஆயுதங்களை எதிர்கொள்ளும் முயற்சியில், ரஷ்யாவில் ஆயுத இருப்பு குறைந்து வருகிறது.
தனது எதிரிகளான அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிரான சவடாலில் வடகொரியா அதிகளவிலான ஆயுதங்களை தயாரித்து இருப்பில் வைத்துள்ளது. மறுபக்கம் உணவுப் பஞ்சத்தால் மக்கள் நலிந்து வந்தபோதும், ஆயுத பலத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளது வடகொரியா. பயன்படுத்தப்படாது நீண்டகாலமாக இருப்பிலுள்ள அந்த ஆயுத தளவாடங்களை தற்போது, தனது நேச தேசமான ரஷ்யாவுக்கு வழங்க வடகொரியா முன்வந்துள்ளது.
இதன் மூலம், பொருளாதார ரீதியில் வடகொரியாவும், ஆயுத பலத்தில் ரஷ்யாவும் பலனடைய இருக்கின்றன. வடகொரியா தயாரித்து வைத்திருக்கும் நாசகார ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், வடகொரியா – ரஷ்யா அதிபர்களின் சந்திப்பை சர்வேச நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
+ There are no comments
Add yours