தென் கொரியாவை சீண்டும் நடவடிக்கைகளில் வட கொரியா !

Spread the love

வட கொரியா நாடாளுமன்றத்தில் நேற்று மிகவும் முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, அண்டை நாடான தென் கொரியா உடன் அனைத்து விதமான பொருளாதார ஒத்துழைப்பையும் முறித்து கொள்கிறோம் என்று தடாலடியாக கூறிவிட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்ததில் இறுதி முடிவை அறிவித்துள்ளனர். இதன்மூலம் கொரிய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

கொரிய தீபகற்பம்

இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் தென் கொரியாவின் கூட்டு ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதாக சுட்டி காட்டுகிறது வட கொரிய. அதற்கு முன்பு வட கொரியாவின் செயல்பாடுகளை ஆராய வேண்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சர்ச்சைக்குரிய நாடாக வட கொரியா காணப்படுகிறது. இந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் எடுக்கும் முடிவுகள், செயல்பாடுகள் அனைத்தும் பலருக்கும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

வட கொரியா ராணுவ நடவடிக்கைகள்

குறிப்பாக ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில் அணு ஆயுதங்கள் வரை கையிலெடுத்தது. உளவு பார்க்கும் வேலைகளுக்காக செயற்கைக்கோள்களை அனுப்பி வல்லரசு நாடுகளை அலறவிட்டது. தென் கொரியாவை ஒட்டிய கடற்பகுதிகளில் க்ரூஸ் ஏவுகணைகளை வீசி சோதனை செய்தது. கடலில் உள்ள இலக்குகள், நிலத்தில் உள்ள இலக்குகள், வானில் உள்ள இலக்குகள் ஆகியவற்றை வெவ்வேறு இடங்களில் இருந்து தாக்கி பலகட்ட சோதனைகளை நடத்தி வருகிறது.

கூட்டு ராணுவ நடவடிக்கை

அதுமட்டுமின்றி தென் கொரியாவை சீண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தென் கொரியா தனது ராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்த முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கைகளில் தென் கொரியா ஈடுபட்டு வருகிறது. இது வட கொரியாவின் கோபத்தை அதிகப்படுத்தியது.

தென் கொரியாவிற்கு சிக்கல்

கடந்த மாதம் வட கொரியா தலைநகர் யோங் யாங்கில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது. தென் கொரியா தான் தங்களின் முதல் எதிரி எனக் குறிப்பிட்டனர். அதுமட்டுமின்றி தங்களது ஏஜென்சிகள் மூலம் அதிரடியாக செயல்பட்டு தென் கொரியாவை தங்களுடன் இணைத்து கொள்வோம். இதற்காக போர் மூளும் சூழல் வந்தாலும் கவலையில்லை.

இருதரப்பு ஒப்பந்தங்கள் முறிவு

எப்படியாவது கொரிய தீபகற்பத்தை ஒன்றிணைத்து ஒரே நாடாக மாற்றுவது தான் எங்களின் இலக்கு என்பது போல் வட கொரியா பேசத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தென் கொரியா உடன் அனைத்து விதமான பொருளாதார ஒத்துழைப்பையும் முறித்து கொள்வதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட 2018 ராணுவ ஒப்பந்தத்தை முறித்து கொள்வதாக வட கொரியா அறிவித்திருந்தது.

போர் பதற்றம்

இவ்வாறு அடுத்தடுத்த அதிரடிகள் போர் உருவாகும் சூழலுக்கு தள்ளி வருகிறது. வட கொரியாவின் அதிரடியை கண்டு தென் கொரியா நிச்சயம் சும்மா இருக்காது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் இணைந்து அதிரடியான வியூகங்களை வகுக்கும். பதிலடி கொடுக்கும். இருப்பினும் போராக மாறிவிட்டால் அதன் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours