பிரான்ஸ் தேசிய கொடி குறித்துஅவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
துனிசியாவைச் சேர்ந்த இமாம் (மத போதகர்) மஹ்ஜூப் மஹ்ஜூபி (52), தெற்கு பிரான்ஸின் பக்னோல்ஸ்-சுர்-செஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் மத போதனை செய்துள்ளார். அப்போது, பிரான்ஸின் மூவர்ணக் கொடி என்பது சாத்தானியம் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை நாடுகடத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து பிரான்ஸ் உள் துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தீவிரவாத சிந்தனை உள்ள இமாம் மஹ்ஜூப் மஹ்ஜூபி கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் நடுகடத்தப்பட்டார். இதுபோன்ற நபர்களை பிரான்ஸில் தங்க அனுமதிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசின் இந்த குற்றச்சாட்டை மஹ்ஜூபி மறுத்துள்ளார். அத்துடன் தான் நாடு கடத்தப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1980-ம் ஆண்டு முதல் பிரான்ஸில் வசித்து வரும் மஹ்ஜூபிக்கு மனைவி மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர். அனைத்து பிள்ளைகளும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றுள்ள நிலையில், மஹ்ஜூபி மட்டும் தங்கும் உரிமை பெற்றிருந்தார். இந்த உரிமத்தை உள் துறை அமைச்சர் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours