அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், செவ்வாய்க் கிழமை அதிகாலை, சரக்கு கப்பல் மோதியதால் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்துக்குள்ளானது.
சரக்கு கப்பல் அதிகாலை 1:30 மணியளவில் மோதியதில் பாலத்தின் எஃகு வளைவுகள் சிதைந்து படாப்ஸ்கோ ஆற்றில் விழுந்தப்போது எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான அந்த சரக்கு கப்பல் பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தப்போது இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது 1.6 மைல் நீளமுள்ள பாலத்தில் இருந்த வாகனங்களின் சரியான எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறையானது ’குறைந்தது ஏழு பேர்’ ஆற்றில் விழுந்ததாக அறிவித்தது.
இந்த விபத்தில், வாகனங்கள் நீரில் விழுந்ததில் சிக்கி தவித்து வரும் 7 பேரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர்கள் பாலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று சில வாகனங்களும் நீரில் விழுந்தன.
இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலேண்ட் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours