அமெரிக்க அதிபர் தேர்தல்- கமலா ஹாரிஸ் மீது இனவாத விமர்சனம் வைக்கும் ட்ரம்ப்

Spread the love

வாஷிங்டன்: புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது ஆதரவாளர்களும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை சரமாரியாக கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசி வருகிறார்கள். குறிப்பாக, இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து வருவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாடுகள் பெரிதும் எதிர்பார்த்துள்ள அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். கமலா ஹாரிஸ் – ட்ரம்ப் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. கடைசிக் கட்ட பிரச்சாரமும் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நாட்களில் இருந்து, அவரை வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், கமலா ஹாரிஸ் தனது பிரச்சார உரையை சற்று தெளிவுடன் அணுகி வருகிறார்.

இந்நிலையில், ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்த பேரணியில் தனது அரசியல் போட்டியாளர்களைக் கண்டித்தும், புலம்பெயர்ந்தவர்களைத் தாக்கியும் 80 நிமிட உரையுடன் நிறைவு செய்தார். அதில், ‘சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் புலம்பெயர்ந்தவர்கள், அவர்களுக்கு சட்ட விரோதமாக இடம் கொடுப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மல்யுத்த வீரர் ஹல்க் ஹேகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கமலாவை மோசமாக அவர்கள் விமர்சித்தனர்.

இதனிடையே ட்ரம்மின் ஆதரவாளர் ஒருவர் கமலா ஹாரிஸை “ஆன்டிகிறிஸ்ட்” என்று முத்திரைக் குத்தினார். ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரான ஜியுலியானி, இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் ஹாரிஸ் பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பதாக அப்பட்டமாக குற்றம் சாட்டினார். நகைச்சுவை நடிகர் டோனி ஹிஞ்ச்க்ளிஃப், ‘அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விருப்பம் உடையவர்கள்’ என லத்தீன் அமெரிக்கர்களை (Latino Americans) கீழ்த்தரமாகவும், நக்கலாகவும் பேசியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட ஓர் இடத்தை குப்பைகளை கொட்டும் தீவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் மூத்த ஆலோசகர் டேனியல் அல்வாரெஸ், போர்ட்டோ ரிக்கோ இன மக்களின் ஓட்டுகளோ, அவரின் சிந்தனைகளோ ட்ரம்பின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புவேர்ட்டோ ரிக்கன் (Puerto Rican) இனத்தை சேர்ந்த பாடகர் ரிக்கி மார்ட்டின், “அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்த மில்லியன் கணக்கான போர்ட்டோ ரிக்கர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க முடியும், பென்சில்வேனியாவில் அதிகப்படியான மக்கள் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், “கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால், அவரால் மூன்றாம் உலகப் போர் மூளும்’ எனவும், ‘சீன அதிபர், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை சமாளிக்கும் அளவுக்கு கமலா ஹாரிஸுக்கு திறமை கிடையாது’ எனவும் கூறி, தனக்கு வாக்கு அளிக்கும்படி வாக்காளா்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதோடு, அதிபர் தேர்தலில் போட்டியிருபவர்கள் ஐக்யூ சோதனை செய்து கொள்ள வேண்டும் என டொனால்டு ட்ரம்ப் கூறி உள்ளார். பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், ‘கமலா ஹாரிஸுக்கு ஐக்யூ சோதனை செய்ய வேண்டும்’ என தொடர்ந்து இரண்டு முறை கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘டொனால்டு ட்ரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என கமலா ஹாரிஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்புக்கு எதிரானவர்களோ, “அவர் (ட்ரம்ப்) மனிதாபிமானமற்ற இனவெறி மிகுந்த மேலாதிக்க சமூகத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்” என்று கூறுகிறார்கள். ட்ரம்பின் பேரணியானது ட்ரம்ப்பைப் போலவே ஆபத்தான, மக்களை பிளவுபடுத்தும் மற்றும் இழிவான செய்தியைப் பிரதிபலிப்பதாக ஹாரிஸ் கூறினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரும், எக்ஸ் வலைதள அதிபருமான எலான் மஸ்க் , ட்ரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். டொனாலடு ட்ரம்ப், கமலா ஹாரிஸ் இடையேயான போட்டியால் சூடு பிடித்திருக்கிறது. ட்ரம்ப் தரப்பின் கீழ்த்தரமான விமர்சனங்களை, கமலா சற்று பொறுமையுடன் கையாண்டாலும் களம்தான் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours