அசோக் சவானுக்கு மாநிலங்களவை சீட்!

Spread the love

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் நேற்று பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில் இன்று அவருக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது .

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய அளவில் பாஜக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்தது அதில் ஒரு வகை தான். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேரை பாஜகவில் இணைத்தது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அசோக் சவானையும் பாஜகவுக்கு இழுத்தது பாஜக. மகாராஷ்டிராவில் அசோக் சவானின் அரசியல் எதிரி என்று வர்ணிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தது அம்மாநில அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அசோக் சவானின் தந்தை எஸ்பி சவான் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர். 65 வயதான அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸின் முகமாக அறியப்பட்டவர். 2009 ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்ற அவர், 2010 ம் ஆண்டு ஆதர்ஷ் குடியிருப்பு சங்க ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டு பதவியில் இருந்து விலகினார். மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர், மாநில காங்கிரஸ் தலைவர், மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர்.

இந்நிலையில்தான் அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே அவர் பாஜகவில் இணைந்தார் என்று கூறப்பட்டது. ஊழல் செய்தவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்த பிறகு புனிதர்கள் ஆக்கப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டிவந்த நிலையில், அதை மெய்ப்பிப்பது போல இன்று அசோக் சவானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறது பாஜக.

இன்று அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் அசோக் சவானின் பெயர் இடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அவர் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

இதேபோல குஜராத்தில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours