வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நாளை கேரளாவுக்கு வருகிறார்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த அவர், வயநாடு தொகுதியில் வெற்றிப் பெற்றார். இந்நிலையில் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரும் ஏப் 19ம் முதல் நடக்க உள்ளது. இதில், ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். கேரள மக்கள் மீண்டும் வெற்றிப் பெற செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அவர் களமிறங்கியுள்ளார்.
ராகுல்காந்திக்கு போட்டியாக, கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் மற்றும் இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதனால் வயநாடு, நட்சத்திர தொகுதியாகவும், கேரளாவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகவும் மாறிவிட்டது. இந்நிலையில், தேர்தல் பணி சம்பந்தமாக கேரளாவுக்கு ராகுல்காந்தி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் இருந்ததால், கேரளாவுக்கு வர முடியவில்லை.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல்காந்தி, அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக நாளை கேரளாவுக்கு வர உள்ளார். நாளை மதியம் 12 மணியளவில் கல்பெட்டா ஆட்சியர் அலுவலகத்தில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார். அதன்பிறகு அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கேரளாவில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26ம் தேதிக்கு முன்பாக கேரளாவுக்கு மீண்டும் வர உள்ளார். அப்போது அவர் வயநாடு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். கேரளாவுக்கு ராகுல்காந்தி நாளை வர உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர். ராகுல்காந்தி வருகையால் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் உற்சாகமடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours