பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

Spread the love

திரிணமூல் காங்கிரஸைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் தனித்து போட்டியிடும் என அறிவித்திருப்பதால் இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணியை நிராகரித்து, அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா கூட்டணி கட்சியின் ஒற்றுமையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், “பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கு 40 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி கண்டறிந்துள்ளது. வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு முன்பு கள ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

தனியாகப் போட்டியிடும் மம்தா பானர்ஜியின் முடிவு குறித்தும், ஆம் ஆத்மி கட்சியும் இதைப் பின்பற்றுமா என்றும் செய்தியாளர்கள் பகவந்த் மானிடம் கேட்டதற்கு, “பஞ்சாப்பில், நாங்கள் (காங்கிரசுடன் கூட்டணி) அப்படி எதுவும் செய்ய மாட்டோம். காங்கிரஸுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும்” என்றார்.

பஞ்சாப்பில் 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி வந்தன. அதனை முதல்வர் பகவந்த் மானின் இன்றைய அறிவிப்பு உறுதிசெய்துள்ளது.

பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிட ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவின் முன்மொழிவுக்கு, கட்சியின் ஒருங்கிணைப் பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்பில் காங்கிரசுடன் கூட்டணிவைத்து தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி மறுத்துவிட்டதாகவும், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் பிடிவாதமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் தனித்து போட்டியிடுவதாக ஒரே நாளில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியா கூட்டணி கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த அறிவிப்புகளால் இந்தியா கூட்டணி கலகலத்து வருவது பாஜகவினரை உற்சாகமடையச் செய்திருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours