பாஜகவிற்கு 150 இடங்கள் தான் கிடைக்கும் என நினைக்கிறேன் – ராகுல் காந்தி!

Spread the love

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து தேசிய, மாநில கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்க, நெருங்க தலைவர்கள் தங்கள் அரசியல் எதிரிகளை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பிரதான போட்டியாளரான பாஜக இந்த முறை 150 தொகுதிகளில் சுருண்டுவிடும் என கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:“15-20 நாட்களுக்கு முன்பு பாஜக 180 இடங்களில் வெற்றி பெறும் என நினைத்தேன. ஆனால் இப்போது அவர்களுக்கு 150 இடங்கள் தான் கிடைக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எங்களுக்கு ஆதரவான தகவல்கள் வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் எங்களின் கூட்டணி மிகவும் வலுவானது. நாங்கள் இந்தத் தேர்தலில் சிறப்பாக செயல்படுவோம்.

கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தியது மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவு அளித்தது போன்ற நடவடிக்கையின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் முறையை பிரதமர் மோடி குறைத்துள்ளார். மீண்டும் வேலைவாய்ப்பை வலுப்படுத்துவதே எங்கள் முதல் பணி. இதற்காக 23 யோசனைகளை எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழிற்பயிற்சிக்கான உரிமையை வழங்குவோம். பயிற்சி பெறும் இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்து, கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை வழங்குவோம். வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கும் சட்டம் இயற்றுவோம்.” இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours