லக்னோ: பசுவுக்கு சேவை செய்து, மாட்டுத் தொழுவத்தில் படுத்திருந்து, சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குணப்படுத்த முடியும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மாட்டுத் தொழுவத்தை திறந்து வைத்து உரையாற்றிய உத்தரப் பிரதேச மாநில கரும்புத் துறை அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார், “ அனைவரும் திருமண ஆண்டு விழாவை மாட்டுத் தொழுவங்களில் கொண்டாட வேண்டும். இஸ்லாமியர்களும் ஈத் அன்று மாட்டுத் தொழுவங்களுக்குச் சென்று ஈத் அன்று பசும்பாலில் சேவையா (இனிப்பு) செய்ய வேண்டும்.
இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால், பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் மாட்டுக்கு முதுகில் தட்டி அதற்கு உணவு பரிமாற வேண்டும். புற்றுநோயாளி இருந்தால் அவர் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, அங்கே படுத்திருந்தால் புற்று நோயும் குணமாகும். மாட்டு சாணம் வறட்டியை எரித்தால் கொசு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மாடு உற்பத்தி செய்யும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளிலும் மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்படும் என்றும் கங்வார் அறிவித்தார். மேலும் விவசாயிகள் தங்கள் வயல்களில் மேய்ந்து வரும் தெருக் கால்நடைகள் குறித்து புகார் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பிலிபிட் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கங்வார், யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் 2022இல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
+ There are no comments
Add yours