தொலைக்காட்சிகளின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களில் பங்கேற்கப் போவதிலை என காங்கிரஸ் கட்சி திடீர் முடிவை எடுத்துள்ளது.
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. ஜூன் 1 உடன் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவுபெறுவதை அடுத்து, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அவற்றையொட்டிய விவாதங்களும் சூடிபிடிக்க இருக்கின்றன.
ஜூன் 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், அதுவரை இந்த கருத்துக்கணிப்புகளும் அவற்றையொட்டிய விவாதங்களும் ஊடகங்களில் களைகட்டும். தேர்தல் அறிவிப்புக்கு பல மாதங்கள் முன்பிருந்தே அமோக வெற்றி, மூன்றாம் முறையாக மீண்டும் ஆட்சி என்பதில் பாஜக திண்ணமாக இருந்தது. அதனை பகிரங்கமாக அறிவிப்பதை, தேர்தல் பிரச்சார உத்தியாகவும் கொண்டிருந்தது.
ஆனால், பலகட்ட வாக்குப்பதிவுகளின் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதாயமான சூழல் தென்பட்ட போதும், அது சார்ந்த இந்தியா கூட்டணியின் அறுதிப்பெரும்பான்மையை உறுதிபடுத்தும் தகவல்கள் இல்லை. அதிருப்தி வாக்குகளால் பாஜக தோல்வியடையும் என்று மட்டுமே காங்கிரஸ் கூறி வந்தது. ஆனால் அதன் தெளிவான வெற்றியை உறுதி செய்யும் சாத்தியக்கூறுகள் ஏதும் புலப்படவில்லை. எனினும் நம்பிக்கை இழக்காது, தேர்தல் முடிவுக்காக காங்கிரஸ் காத்துள்ளது. முடிவு வெளியாகும் வரை அதிகம் வாய் திறக்காதும் அமைதி காக்கிறது.
இந்த சூழலில் வாக்குப்பதிவுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகள் தொடர்பான டிவி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், ஊடகத்துறை தலைவருமான பவன் கேரா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் மற்றும் அவர்களின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும். அதற்கு முன், டிஆர்பி-க்காக ஊகங்கள் மற்றும் அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுவதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே ’எக்ஸிட் போல்ஸ்’ மீதான விவாதங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் பங்கேற்காது . ஜூன் 4 முதல் விவாதங்களில் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம்” என்று தனது எக்ஸ் தள பதிவில் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours