டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை விலை பேசும் ரிலையன்ஸ் !

Spread the love

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், டிஸ்னி+ஹாட்ஸ்டாரை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்பானி குழுமத்தை பொறுத்தவரை எந்த துறையில் இறங்கினாலும் அதகளம்தான். அதிலும் தம்பி அனில் அம்பானி பின்வாங்கிய பிறகு, அம்பானி சாம்ராஜ்யம் என்றாலே அது முகேஷ் அம்பானி என்றாகிப் போனது. பல்வேறு புதிய துறைகளில் காலடி வைப்பதோடு, ஏற்கெனவே ராஜபாட்டையில் இருக்கும் துறைகளில், புதிய நிறுவனங்களை வளைத்துப் போடுவதிலும் ஆர்வமாக இருக்கிறார் முகேஷ் அம்பானி.

இந்த வரிசையில் தற்போது சர்வதேச பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தை, வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

அண்மையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை முகேஷ் அம்பானியின் வயோகாம் மீடியா நிறுவனம் பெற்றது. இந்த போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் இலவசமாக காணக்கிடைத்தன. கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பும் வாய்ப்பு தட்டிப் போனதில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் பெருத்த அடிவாங்கியது. அதன் பார்வையாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

முன்னதாக, ஹெச்பிஓ உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேச பொழுதுபோக்கு தளங்களுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தததில், கணிசமன சந்தாதாரர்களை டிஸ்னி+ஹாட்ஸ்டார் இழந்திருந்தது. மேலும் பிரம்மாண்டம் காட்டும் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் என பிரபல ஓடிடி தளங்கள் மற்றும் புதிது புதிதாக களமிறங்கும் பிராந்திய ஓடிடி தளங்கள் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாது டிஸ்னி+ஹாட்ஸ்டார் தத்தளித்து வருகிறது.

இவற்றின் மத்தியில் இந்த டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் மற்றும் டிவி உள்ளடக்கங்களை கைகொள்ள, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முயல்வதாக செய்தி வெளியாகியுள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் பூர்வாங்க பேச்சுவார்த்தை நடப்பதை ரிலையன்ஸ் தரப்பிலும் உறுதி செய்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours