ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்- காங்கிரஸ் தோல்வி ஏன் ?

Spread the love

சண்டிகர்: கடந்த 5-ம் தேதி ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று காலைவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காலை 9 மணி அளவில் பெருந்திரளான தொண்டர்கள் குவிந்திருந்தனர். பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

காலை 10 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவந்தது. ஆளும் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியில் காட்சிகள் மாறின. பாஜக தலைமை அலுவலகத்தில் பெருந்திரளான தொண்டர்கள் குவிந்து வெற்றிக் கொண்டாட்டம் களை கட்டியது. காங்கிரஸ் தலைமை அலுவலகம் வெறிச்சோடியது.

காங்கிரஸின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸில் உட்கட்சி பூசல் தலைதூக்கி இருந்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டனர். இது அந்த கட்சியின் தேர்தல் தோல்விக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.

பிராந்திய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பிரித்தனர். இதனால் காங்கிரஸின் வாக்கு வங்கி சரிந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த சமுதாய வாக்குகளுக்கு மட்டுமே காங்கிரஸ் முன்னுரிமை அளித்தது. இதனால் ஜாட் அல்லாத சமுதாய மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுவும் காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

பாஜகவின் வியூகம்: ஹரியானாவில் 36 சமுதாயங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இதில் ஜாட் சமுதாயம் பெரும்பான்மையாக உள்ளனர். ஹரியானா மக்கள் தொகையில் ஜாட் சமுதாயத்தினர் 27 சதவீதம் பேர் உள்ளனர்.

விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் காரணமாக ஹரியானாவின் பாஜக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. இதை சமாளிக்க கடந்த மார்ச் மாதம் முதல்வர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் நீக்கப்பட்டார். புதியமுதல்வராக நயாப் சிங் சைனி நியமிக்கப்பட்டார். இவர் சைனி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். ஹரியானா மக்கள் தொகையில் சைனி சமூகத்தினர் 8 சதவீதம் பேர்உள்ளனர். அதோடு ஹரியானாவின் 44 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோரின் முகமாகவும் அவர் முன்னிறுத்தப்பட்டார்.

ஜாட் அல்லாத சமூகங்களின் வாக்குகளை கவரும் வகையில் முதல்வர் நயாப் சிங் சைனி ஹரியானா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வியூகம் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.

பிராந்திய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களால் காங்கிரஸ் நம்பியிருந்த ஜாட் சமூகத்தின் வாக்குகள் சிதறின. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜாவை, ஜாட் சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா முழுமையாக ஓரம் கட்டினார். இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் வாக்குகள் காங்கிரஸுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இது காங்கிரஸின் தோல்விக்கு வழிவகுத்தது. இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours