ஜேஎம்எம் லஞ்ச வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது தூய்மையான அரசியலை உறுதி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது 1993ல் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு நரசிம்ம ராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அவரது அரசை காப்பாற்றியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
லஞ்சம் பெற்றதற்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், அதை ரத்து செய்யக் கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்கள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை ஏற்க மறுத்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். நாடாளுமன்றத்துக்குள் வாக்களித்த செயலை, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது என அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் 1998-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பாலானவர்கள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்களின் வாதத்தை ஏற்று அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்த அமர்வு இன்று ஒருமித்த தீர்ப்பை வழங்கியது. அதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவோ, பேசவோ லஞ்சம் வாங்குவது குற்றம். அவர்கள் எந்த இடத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதோ அல்லது லஞ்சம் பெற்றதற்காக எந்த இடத்தில் செயல்படுகிறார்கள் என்பதோ முக்கியமல்ல.
பெற்ற லஞ்சத்துக்காக நாடாளுமன்றத்துக்குள் அல்லது சட்டமன்றத்துக்குள் வாக்களிப்பதால் அல்லது பேசுவதால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது. அவர்கள் லஞ்சம் பெறுவது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றமே. லஞ்சம் பெற ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த தருணத்திலேயே அவர்கள் குற்றமிழைத்தவர்களாகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் லஞ்சம் பெறுவதன் மூலம் அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்பை அழிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், “மிகச் சிறந்த தீர்ப்பு. இது தூய்மையான அரசியலை உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours