கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் மழையால் வயநாட்டில் கடும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு இரண்டாவதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.
அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியைச் சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அப்போது மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், வயநாட்டின் சில பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கடவுள் வலிமை அளிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன். நிலச்சரிவு குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பேசினேன். அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் மோடி தனது எக்ஸ் கணக்கில் எழுதியுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரிடம் பேசிய பிரதமர் மோடி, பாஜகவினரை அனுப்பி அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சர் ஜார்ஜிடமும் பேசினார். இந்த நிலையில், வயநாடுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சரிடம் பேசுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவரும், வயநாட்டின் முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த நிலைல், கேரள சுகாதாரத் துறை- தேசிய சுகாதார இயக்கம் அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது. அத்துடன் 9656938689 மற்றும் 8086010833 என்ற ஹெல்ப்லைன் எண்களையும் அது வழங்கியுள்ளது.
+ There are no comments
Add yours