மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நேற்று முடிவடைந்தது. இதில், மக்களவைத் தேர்தலை இணைந்தே எதிர்கொள்வது, தொகுதிப் பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை தொடங்குவது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைந்து நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், “நாடாளுமன்றத் தேர்தலை பாஜக விரைவாக நடத்தக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் விரைவாக ஒன்றிணைந்துள்ளோம். இதனால், தற்போது பாஜக அச்சமடைந்துள்ளது. எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது. இது குறித்த கலந்துரையாடல் இந்தியா கூட்டணிக்குள் விரைவில் நடக்கும். மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்” என தெரிவித்தார்.
+ There are no comments
Add yours