புதுடெல்லி: “ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம் வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று வங்கதேச கலவரம் குறித்து டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்,
வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் வங்கதேச சூழல் குறித்து விளக்கமளித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்து பேசினார். அதில், “ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஹசீனா இந்தியா வந்து இன்னும் 24 மணிநேரம் கூட ஆகவில்லை. அவர் அதிர்ச்சியில் உள்ளார். அவரது எதிர்கால திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஹசீனாவுடன் பேசும் முன், அவர் குணமடைய அவகாசம் அளிக்க விரும்புகிறோம். அதன்படி, எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய ஹசீனாவுக்கு அவகாசம் அளித்துள்ளோம்.
அதேநேரம், இந்திய வெளியுறவுத் துறை, வங்கதேச ராணுவத்துடன் தொடர்பில் உள்ளது. வங்கதேசத்தில் படிக்கும் 10,000 இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச ராணுவத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது. நாட்டின் அமைதியில் மற்ற நாடுகளில் பங்களிப்பு உள்ளதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், வங்கதேசத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மத்திய அரசு வங்கதேச நிலைமைகளை மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் சொத்துகள் முதலானவை போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறது. இது குறித்தும் எங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுளோம்” என்று விளக்கமளித்தார் ஜெய்சங்கர்.
முன்னதாக கூட்டத்தில், “வங்கதேச கலவரத்தில் வெளிநாடுகளின் சதி உள்ளதா?” என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். கூட்டத்துக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளும் தேசத்தின் பாதுகாப்புக்கு மத்திய அரசுடன் ஒத்துழைப்பதாக கூறினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் வி விஜய்சாய் ரெட்டி, “நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அரசுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று கூட்டத்தில் கூறினார்.
தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்து இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. கூட்டத்தில் கிடைத்த ஒருமித்த ஆதரவையும் புரிந்துணர்வையும் பாராட்டுகிறேன்” என்று பதிவிட்டார்.
+ There are no comments
Add yours