மக்களவைத் தேர்தலின் மத்தியில் மேற்கு வங்க மாநில பாஜக எம்பியான குனார் ஹெம்ப்ராம், வாக்குப்பதிவுக்கு சில தினங்கள் முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மேற்கு வங்காளத்தின் ஜார்கிராம் தொகுதி பாஜக மக்களவை உறுப்பினரான குனார் ஹெம்ப்ராம் என்பவர், இன்று பிற்பகல் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பழங்குடியினருக்கான தனித்தொகுதியில் வென்ற குனார் ஹெம்ப்ராம், தனது கட்சித் தாவலை நியாயப்படுத்தும் வகையில், ’பாஜக பழங்குடியினருக்கு எதிரான கட்சி’ என்று குற்றம் சாட்டி உள்ளார்.
பாஜகவால் ஜார்கிராம் தொகுதியில் சீட் மறுக்கப்பட்ட ஹெம்ப்ராம், திரிணமூல் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது “பாஜக பழங்குடியினருக்கு எதிரான கட்சி. அவர்கள் பழங்குடி சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிக்க விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார். அபிஷேக் பானர்ஜி பேசும்போது,”பாஜக ஒருபோதும் மக்கள் நலனுக்காக செயல்படாது என்பதை குனார் ஹெம்ப்ராம் கடந்த ஆண்டுகளில் அனுபவபூர்வமாக உணர்ந்தார்” என்றார்.
மோடி இன்றைய தினம் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளத்திற்கு வந்து ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெறும் ஐந்து இடங்களில் வாக்காளர்களிடம் வாக்கு கோரினார். அபிஷேக் பானர்ஜி ஹெம்ப்ராமை வரவேற்கும் போது, பிரதமர் மோடி பங்குரா மாவட்டத்தின் பிஷ்ணுபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மோடியின் விஜயத்தின்போது, பாஜக எம்பி ஒருவரின் திரிணமூல் காங்கிரஸ் தாவலை அபிஷேக் பானர்ஜி அவசரமாக நிகழ்த்திக் காட்டினார்.
குனார் வென்றிருந்த ஜார்கிராம் மற்றும் மேற்கு வங்கத்தின் இதர 7 தொகுதிகளுக்கு மே 25 அன்று ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக 2019-ல் இரண்டு தொகுதிகளை வென்றது. 2019 தேர்தலில், ஜார்கிராமில் சுமார் 14 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்தபோது, ஹெம்ப்ராம் கடுமையான போட்டியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பாஹா சோரனை 11,767 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேற்கு வங்காளத்தின் 42 இடங்களில், 2019-ம் ஆண்டில் பாஜக 18 இடங்களில் வென்றது; அதில் ஜார்கிராம் உட்பட 2 தொகுதிகள் பழங்குடியினருக்கானவை.
+ There are no comments
Add yours