புல்வாமா தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திய பாஜக, அயோத்தி ராமர் கோயில் திறப்பிலும் அதே யுக்தியை கையாளுகிறது என்று கர்நாடக அமைச்சர் தசரதைய்யா சுதாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டமிடல் மற்றும் புள்ளியியல்துறை அமைச்சர் தசரதைய்யா சுதாகர், சித்ரதுர்காவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புல்வாமா தீவிரவாத தாக்குதலை வாக்குக்காக பாஜக அரசு பயன்படுத்தியது. இந்த முறை அந்த இடத்தில் ராமரின் படத்தை வைத்திருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு என்பது ஒரு ஸ்டண்ட். மக்கள் மூட்டாள்கள் இல்லை. நாம் இரண்டு முறை முட்டாள்களாகி விட்டோம். மூன்றாவது முறையும் முட்டாள்களாக மாட்டோம் என்று நான் நம்புகிறேன்.
ராமர் கோயில் திறப்பிக்கு பின்னால் மக்களவைத் தேர்தல் உள்ளது என்பது உண்மைதான். நானும் ரகுமூர்த்தி எம்எல்ஏவும் ராமர் கோயிலுக்கு பணம் கொடுத்துள்ளோம். கடந்த காலத்தில் கோயில்களுக்கு செங்கல் அனுப்பியிருக்கிறோம். இந்தியாவின் மதநம்பிக்கையை பாஜக வாக்குகள் பெற பயன்படுத்துகிறது. கடந்த தேர்தலில் இந்த ராமர் கோயில் எங்கே இருந்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில், ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினரின் வாகனங்கள் வரிசையாக சென்றுகொண்டிருந்தன. அப்போது, ஒரு சிறிய கார் வேகமாக வந்து துணை ராணுவப்படையினர் சென்ற ஒரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மிகப்பெரிய சத்தத்துடன் அந்த கார் வெடிக்கப் பேருந்தில் இருந்த 40 துணை ராணுவப்படையினரும் உடல் சிதறி பலியானார்கள். தேசத்தையே இந்த தாக்குதல் உலுக்கியது. எந்த குற்றமும் செய்யாத சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது மக்களின் மனதில் கொதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours