டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு விருந்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். அங்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்துப் பேசினார். இதில் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த கேஜ்ரிவால், “அமலாக்கத் துறையை தடுத்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தை ஒழித்தால், பாஜகவில் இருக்கும் பாதி அரசியல் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி விடுவார்கள். சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே போன்றோர் தங்களுக்கென தனியாக ஒரு கட்சியை தொடங்கி விடுவார்கள். பிற கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் பாஜகவில் சேர முக்கிய காரணமே அமலாக்கத் துறைதான். அது இல்லையென்றால் யாரும் பாஜகவில் இணைய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை கேஜ்ரிவால் ஆறாவது முறையாக நிராகத்துள்ளார். ஐந்து முறை அவர் நேரில் ஆஜராகாததால் இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை நீதிமன்றத்தை நாடிய நிலையில், தற்போது ஆறாவது முறையும் அமலாக்கத் துறையின் சம்மனை கேஜ்ரிவால் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours