இது பாஜகவின் தேர்தல் நாடகம்… திமுக !

Spread the love

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிருக்கவிருக்கும் நிலையில் மத்திய அரசு அவசர அவசரமாக பூமி பூஜை போட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணி தொடங்கியது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. கட்டுமானப் பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியிடமாக இருப்பதால் தேர்தல் நாடகம் என விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்துக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்வதில் அப்போதிருந்த அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் வெளிப்படையாக மோதல் ஏற்பட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை மத்திய அரசு, எய்ம்ஸ்-க்கு இடம் தேர்வு செய்வதில் தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிடவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு மத்திய பாஜக அரசு, ‘எய்ம்ஸ்’க்கு தமிழகத்தில் இடம் தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கையில் எடுத்தது.

, சசிகலா பின்னணியில் அதிமுக அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூர் செங்கிப்பட்டிக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தது. ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டதோடு அதிமுக அரசின் கருத்தைக் கேட்காமலே மதுரையைத் தேர்வு செய்து அறிவித்தது. அதனால் அப்போதைய அதிமுக அரசு, ‘எய்ம்ஸ்’- மருத்துவமனைத் திட்டத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

அதனால், கடந்த மக்களவைத் தேர்தல் வரை கட்டுமானப்பணி தொடங்கவில்லை. திமுகவினர், மதுரைக்கு அறிவித்த ‘எய்ம்ஸ்’ எங்கே? என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்தனர். திமுக பின்னணியில், மதுரையில் தொழில் முனைவோர், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் 2019-ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி மதுரை வந்து தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். பிரதமரே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டியதால் கட்டுமானப்பணி விரைவில் தொடங்கிவிடும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டது. அடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர், மதுரை ‘எய்ம்ஸ்’ விவகாரத்தை கையில் எடுத்தனர். அக்கட்சியின் தற்போதைய அமைச்சரான உதயநிதி, ஒற்றைச் செங்கலை எடுத்துக் கொண்டு தமிழம் முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் கட்டுமானப்பணியை தொடங்கிவிடுவோம் என்றார்.

திமுகவும் ஆட்சிக்கு வந்தது. அதனால், எய்ம்ஸ் கட்டுமானப்பணியைத் தொடங்கினால் அது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும் என மத்திய அரசு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணியை கிடப்பில் போட்டது.

மக்கள் அதிருப்தியடைந்ததால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மத்திய பாஜக அரசு, திமுக மீதும், பாஜக அரசோ திமுக ஒத்துழைக்கவில்லை என்றும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், இவர்களின் அரசியல் சண்டைக்கு இடையே அடுத்த மக்களவைத்தேர்தல் வந்துவிட்டநிலையிலும்கூட எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை.

மதுரை எம்பி.சு.வெங்கடேசன், எய்ம்ஸ் வரவிருக்கிற தோப்பூருக்குட்பட்ட விருதுநகர் எம்பி-மாணிக்கம் தாகூர் போன்றோர் மக்களவையில் தொடர்ந்து கேள்வி எழுப்பினாலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் அவர்களால் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் எந்த வகையிலும் உதவ முடியவில்லை.

இந்தச் சூழலில் சமீபத்தில் மதுரைக்கு வந்த பிரதமர் மோடியிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை பாஜக பிரமுகர்கள், கடந்த மக்களவைத்தேர்தல் நேரத்தில் தாங்கள்தான் வந்து எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டிச் சென்றீர்கள், அதையே சொல்லி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள், எங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்ற கவலையைத் தெரிவித்தனர்.

மோடி, டெல்லி சென்ற சில நாட்களில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு பூமி பூஜை சத்தமில்லாமல் நடந்துள்ளதோடு, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் யாரையும் அழைக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் எய்ம்ஸ்-ஐ வைத்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் மத்திய பாஜக அரசு அவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, சத்தமில்லாமல் எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு பூமி பூஜை நடத்தியது.

தேர்தலுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை எனில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு எய்ம்ஸ் மீண்டும் உதவுவதாக அமைந்துவிடும். அதற்கு ஏற்ப பூமி பூஜை நடந்த இடத்தில் தற்போது வெறும் 2 செங்கல்கள் மட்டுமே கிடக்கின்றன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு செங்கல்லை கையில் வைத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக, பூமி பூஜை நடத்திய பின்னரும் எய்ம்ஸ் கட்டுமானப்பணியை தொடங்காததால் இது தேர்தல் நாடகம் என திமுக கூட்டணிக் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். மேலும், மக்களவைத் தேர்தலுக்கு 2 செங்கல்களுடன் திமுக கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று தெரிவித்தனர்.

எய்ம்ஸ்-ஐ வைத்து இவ்வளவு பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதிமுகவினரோ எய்ம்ஸ்க்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours