ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 120 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என செய்திகள் வெளியானது.
ஆனால், அதன்பின் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 80% பேருந்துகளும் இன்று வழக்கம்போல் இயங்கும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை தங்களது பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் கூறுகையில், சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் தவறுகள் இல்லை என்றால் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வர் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து இணை ஆணையர் முத்து தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதனை தொடர்ந்து, சென்னை கே.கே நகர் உள்ள இணை போக்குவரத்து ஆணைய அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் நாளை விடுவிக்கப்படும் என அரசு உறுதியளித்ததையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours