பதினாறு லட்சம் சொந்த காசில், அரசு பள்ளிக்கு பேருந்து வாங்கி தந்த ஊராட்சிமன்ற தலைவி !

Spread the love

காங்கயம்: அடிப்படை வசதிகளே இல்லாத பள்ளிகள் தான், காங்கயம் அருகே படியூர் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள். இந்த பள்ளிகளுக்கு வர குழந்தைகள் பல ஆண்டு காலமாக பெரும் சிரமத்தை சந்தித்தனர். பேருந்து வசதியற்ற நிலையில், பள்ளி குழந்தைகள் அனுபவித்த சிரமத்தை, ஊராட்சி தலைவர் தனது அற்புத செயலால் இன்றைக்கு மாற்றிக்காட்டி, மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.

ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம்

குழந்தைகளின் நிலையை அறிந்த படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், தனது சொந்த நிதியாக ரூ.16 லட்சத்தில் பேருந்து வசதி செய்து தந்ததே மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம். பள்ளிக் குழந்தைகளுக்கு பெரும் சுமையாக இருந்த பயணம் இன்றைக்கு இனிமையாக மாறி உள்ளது.

படியூரை சுற்றியுள்ள இந்திராநகர், நல்லியபாளையம், புதுக்காலனி, சிவகிரிபுதூர், பழநியப்பா நகர், கோவில்மேடு, சத்தியா நகர், ரோஸ் கார்டன், காந்தி நகர் என சுற்றுவட்டாரத்தில் பேருந்து வசதியற்ற நிலையில் பள்ளிக்கு வந்து செல்லும் 200 குழந்தைகளை தேர்ந்தெடுத்து, நாள்தோறும் எவ்வித கட்டணமும் இன்றி, அழைத்துச் செல்ல காலை, மாலை வேளைகளில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டணமில்லாத பள்ளி பேருந்து சேவையை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று முன் தினம் (ஜூலை 4) தொடங்கி வைத்து வாழ்த்தினார். படியூர் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 200 குழந்தைகளுக்காக இதனை செய்துள்ளார் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம்.

படியூர் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கான பேருந்து சேவையை தொடங்கி வைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ .சாமிநாதன். இது தொடர்பாக அவர் கூறும்போது, “குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்ற ஒற்றைச்சிந்தனை மட்டுமே எங்களுக்கு இருந்தது. மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் நாங்களும்.

இங்கு பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத நிலையில் குழந்தைகள், அவர்களது தாய்மார்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெற்றோர் என பலரும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர பெரும் சிரமப்பட்டனர். போக்குவரத்து பிரச்சினையால், சில குழந்தைகள் இடைநிற்றலுக்கு ஆளாகும் சூழ்நிலை கூட ஏற்பட்டது. இதனை தவிர்க்கவே, குழந்தைகள் கல்வியில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது என கருதியே அரசுப்பள்ளிகளுக்கான பேருந்து சேவையை தொடங்கி உள்ளோம்.

பேருந்தில் 4 கேமராக்கள், ஜிபிஎஸ் உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருப்பதால், பெற்றோர் இருந்த இடத்தில் இருந்தே கவனித்து கொள்ளலாம். அதேபோல் காலை, மாலை வேளைகளில் பேருந்து எங்கு வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். பேருந்து ஓட்டுநர், எரிபொருள், உதவியாளர் மற்றும் பள்ளி பேருந்துக்கான வரி என மாதந்தோறும் ஒரு தொகை தேவைப்படுகிறது. இருந்தபோதிலும் 200 குழந்தைகளின் கல்விக்காக, யாரிடமும், எவ்வித கட்டணம் பெறாமல் நாங்களே செய்து தருகிறோம்” என்றார் மிகவும் உறுதியாக.

பெற்றோர் கூறும்போது, “கல்வி கற்க யாருக்கும்எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கும் நல்உள்ளங்களின் கூட்டு முயற்சியால், எங்கள் குழந்தைகள் இன்றைக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எங்கள் குழந்தைகளின் பல ஆண்டு கால துயரம், தற்போது துடைத்தெறியப்பட்டுள்ளது. பேருந்து வசதியற்ற இந்த பள்ளிக்கு கிடைத்திருக்கும், கட்டணமில்லா பேருந்து சேவையானது, பெற்றோர்களாகிய எங்களையும், எங்களது குழந்தைகளையும் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது” என்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours