தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பொதுவாக விடுமுறை நாள்களில் ஏராளமான பக்தர்கள் திருப்பதி, திருமலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வார இறுதி நாளான சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் நாளை பக்ரீத் பொது விடுமுறை என தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை தினம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மலைப்பாதையில் 5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் வரிசை நீண்டுள்ளது. மேலும், 36 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், மோர் ஆகியவை வழங்கப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் 66,782 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். அவர்களில் 36,229 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தியுள்ளனர்.
உண்டியல் காணிக்கையாக ரூ.3.71 கோடி வரப்பெற்றுள்ளதாக திருப்பதி, திருமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வரும் 30ம் தேதி வரை வார இறுதி நாள்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours