புற்றுநோயால் மனைவி இறந்த துக்கம் தாளாமல் அசாம் மாநில உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐபிஎஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரது மனைவி நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் தலைநகர் கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த ஷிலாதித்யா சேத்தியா பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவர் தனது மனைவியின் உடலைப் பார்த்து கதறியழுதார். அங்கிருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
ஆனாலும், துக்கத்தைத் தாங்க முடியாமல் துப்பாக்கியால் சுட்டு மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த சில நிமிடங்களிலேயே அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவிற்கு அசாம் காவல் துறை தலைமை இயக்குநர் ஜி.பி.சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கலில், ” நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடிய அவரது மனைவி இறந்ததாக மருத்துவர் அறிவித்த சில நிமிடங்களிலேயே சேத்தியா தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஒட்டுமொத்த அசாம் காவல்துறை குடும்பமும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours