புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே கோயில்களில் நடை திறக்கப்படுகிறது!

Spread the love

நாளை அதிகாலை புத்தாண்டு பிறக்க இருப்பதை அடுத்து புத்தாண்டில் முதல் வேலையாக பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுகிறார்கள். அவர்களின் வசதிக்காக முக்கியமான கோயில்களில் நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தில் பலர் அதிகாலையில் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன் மூலம் அந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையில் வளம் பெருகி மகிழ்ச்சி உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதனால் சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் அனைத்து கோவில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடை திறக்கப்படும் என்றும், இந்தக் கோயில்களில் சிறப்பு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பெருமாள் கோவிலிலும் புத்தாண்டை ஒட்டி அதிகாலை சிறப்பு தரிசனத்திற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதே போல தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்கள் அனைத்திலும் காலை நான்கு மணிக்கு நடை திறக்கவும், சிறப்பு அபிஷேகம் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு தினத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு மன நிம்மதி மற்றும் புதிய நம்பிக்கைகளை பெறுவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours