சிதம்பரம் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன தேரோட்டம்.. கோலாகலம்.

Spread the love

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்வை முன்னிட்டு நேற்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ‘சிவ சிவ’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர்இழுத்தனர்.

பூலோக கைலாயம் என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம்கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது .

முக்கிய நிகழ்வில் ஒன்றான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட, கோயிலில் இருந்து சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேர்களின் முன்பாக சிவனடியார்கள், வேத விற்பன்னர்கள் ஆகியோர் வேத மந்திரங்கள் மற்றும்தேவாரம், திருவாசகம் பாடியபடி சென்றனர். தேரோடும் நான்குவீதிகளிலும் பெண்கள் மாக்கோலமிட்டிருந்தனர்.

கீழ வீதி நிலையில் இருந்து புறப்பட்ட தேர் கீழ வீதி, தெற்கு வீதி,மேல வீதி, வடக்கு வீதி வழியாகச்சென்று, நிலையை அடைந்தது. ஒவ்வொரு வீதியிலும் மண்டகப்படிதாரர்கள் படையல் செய்தனர். மேல வீதியும், வடக்கு வீதியும்சந்திக்கும் முகப்பில், தொன்றுதொட்டு வரும் மரபின்படி பருவதராஜகுல மரபினர், நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு பட்டு சார்த்தினர். மேலும், பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டனர். நேற்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத மன் நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

இன்று திருமஞ்சனம்: இன்று (ஜூலை12) அதிகாலை சிவகாமசுந்தரி – நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பிறகு, பிற்பகல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும். நாளை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதியுலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில்பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலர் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர். விழாவையொட்டி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுககளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் நகரில் குவிந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours