பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 12ம்தேதி திருநெடுந்தாண்டகத்தினையடுத்து, 13ம்தேதி தொடங்கி நடைபெற்றுவரும் சிறப்புவாய்ந்த வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழாவின் பகல்பத்து நாட்கள் நிகழ்வில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உலாவரும் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்து வழிபாடு செய்வர்.
வைகுந்த ஏகாதசி விழாவின் 9ம் திருநாளான இன்று ‘முத்துக்குறி’ பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து கிரீடம், முத்துகலிங்கு ஆபரணம், முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளி உள் பிரகாரங்களில் திரண்டிருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்துவந்த நம்பெருமாள்(உற்சவர்) திருமங்கையாழ்வாரின் திருவாய்திருமொழி பாசுரங்களை கேட்டருளி பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு பொதுஜனசேவை சாதித்துவருகிறார். இரவு அரையர்கள் சேவையினையடுத்து மூலஸ்தானத்தை சென்றடைவார்.
மூலவரின் முத்தங்கி சேவையினை வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் கண்டுமகிழ்ந்த பக்தர்களுக்கு, நம்பெருமாள் உற்சவரும் முத்தங்கி மற்றும் முத்து கிரீடம் சேவைசாதித்ததை ஆயிரக்கணக்காண பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாளை மோகினி அலங்காரத்துடன் பகல் பத்து உற்சவம் நிறைவுபெற்று, 23ஆம் தேதி அதிகாலை 4. மணிக்கு பரமபத வாசல் திறப்பு எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது
+ There are no comments
Add yours