பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
ஹோபர்ட் நகரில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபர் அஸம் 41, ஹசீபுல்லா கான் 24, ஷாகீன் ஷா அப்ரிடி 16 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த அணி சரிவை சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்களையும் ஸ்பென்சன் ஜான்சன், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
118 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டாயினிஸ் 27 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், டிம் டேவிட் 7 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக மேத்யூ ஷார்ட் 2, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 18, கேப்டன் ஜோஷ் இங்லிஷ் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டிருந்த்து.
+ There are no comments
Add yours