டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 89 ரன்களைச் சேர்த்தார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது மாபெரும் தவறாக அமைந்துவிட்டது. ஹைதராபாத்தின் ஓப்பனர்களாக களம் கண்ட டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா இணைந்து டெல்லியின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தனர்.
முதல் ஓவரில் 3 ஃபோர், ஒரு சிக்ஸ். 2ஆவது ஓவரில் 2 சிக்ஸ். 3-வது ஓவரில் 4 ஃபோர் ஒரு சிக்ஸ் என விளாசினர். அந்த வகையில் 16 பந்துகளில் அரைசதம் கடந்தார் டிராவிஸ் ஹெட். ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் இது.
இருவரும் இணைந்து சிக்ஸ், ஃபோர் என விளாசிக்கொண்டிருக்க 6 ஓவருக்கு 125 ரன்களைச் சேர்த்து மலைக்க வைத்தது இந்த இணை. ஐபிஎல் பவர் ப்ளே சரித்திரத்தில் 125 என்பது அரியப்பெரும் சாதனை. பாவம் டெல்லி பவுலர்கள் திணறிக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக குல்தீப் யாதவ் 7ஆவது ஓவரில் அபிஷேக் சர்மாவை 40 ரன்களில் அவுட்டாக்கியது டெல்லி அணி ரசிகர்களுக்கு ஆகப்பெரும் நிம்மதி. அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் அதே ஓவரில் 1 ரன்னுக்கு அவுட்.
தெறிக்கவிட்டுக்கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டை சதமடிக்க விடாமல் 89 ரன்களில் விக்கெட்டாக்கினார் குல்தீப் யாதவ். இருப்பினும் 32 பந்துகளில் 89 ரன் மலைப்பான நம்பர் தான்.
அடுத்து வந்த கிளாசன் 15 ரன்களில் கிளம்ப 10 ஓவர்கள் முடிவில் 158 ரன்களைச் சேர்த்தது ஹைதராபாத். ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது.
தொடர்ந்து வந்த வீரர்களில் நிதிஷ்குமார் ரெட்டி 37 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஷாபாஸ் அகமது – அப்துல் சமத் ரன்களை ஏற்றினர். கடைசி ஓவரில் சமத் 13 ரன்களுக்கும், கம்மின்ஸ் 1 ரன்னுக்கும் அவுட்டாகினர்.
கடைசி பந்தில் ஷாபாஸ் அகமது சிக்சர் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 266 ரன்களை குவித்தது. ஷாபாஸ் அகமது 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
+ There are no comments
Add yours