இந்திய அணி ஸ்பின் பவுலிங்கை ஆடும் விதம் சிரிப்பை வரவழைப்பதாக இருகிறது- இயன் சாப்பல்

Spread the love

இந்திய அணி ஸ்பின் பவுலிங்கை ஆடும் விதமும் சிரிப்பை வரவழைப்பதாக இருப்பதாக இயன் சாப்பல் எழுதியுள்ளார்.

புனே, மும்பை ஸ்பின் பிட்ச்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்து நியூஸிலாந்து அணி முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் இந்திய அணியை வரலாறு காணாத விதத்தில் ஒயிட் வாஷ் தோல்வியை பரிசாக அளித்துள்ளது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சில் ஆடத்தெரியாமல் 46 ரன்களுக்குச் சுருண்டு ஹென்றி, ரூர்க் இருவரிடமும் மடிந்தது. டெஸ்ட் தோல்வியில் முடிந்தது. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது போல், ‘அட விடுப்பா அவங்களாவது வேற ஸ்டேட், வேற கண்ட்ரி’. ஆனால் புனே, மும்பை ரேங்க் டர்னர் பிட்ச்களில் இந்திய அணி தோல்வி கண்டது மிக மிக வேதனை தரக்கூடியது. இப்போது என்ன நிலைமைக்கு இந்திய அணி வந்து விட்டது வேகப்பந்து வீச்சும் ஆடத்தெரியாது, ஸ்பின் பந்து வீச்சையும் ஆடத்தெரியாது என்ற நிலைக்கு ‘முன்னேறியுள்ளது’.

இங்கிலாந்து அணி பாஸ்பால் என்று ஒன்றை பைத்தியக்காரத்தனமாக இடம் பொருள் ஏவலின்றி பயன்படுத்தி சிரிப்பை வரவழைக்கும் விதத்தில் ஸ்பின் பவுலிங்கை ஆடி உதை வாங்குவதும், இந்திய அணி ஸ்பின் பவுலிங்கை ஆடும் விதமும் சிரிப்பை வரவழைப்பதாக இருப்பதாக இயன் சாப்பல் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் இயன் சாப்பல் எழுதிய பத்தியில் கூறியிருப்பது இதுதான்: பேட்டிங் தோல்விகள் ஒரு போதும் நல்ல அனுபவம் இல்லை. நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு இரண்டிடமும் இந்திய அணி சரணாகதி அடைந்துள்ளது மிக மோசமான ஒரு காலக்கட்டத்தில் நடந்துள்ளது என்பதுதான் விஷயம். ஆஸ்திரேலியா போன்ற மிகவும் திறமையும் உழைப்பும் தேவைப்படும் தொடர் இருக்கும் போது இந்திய அணி பலத்தைக் காட்டியிருக்க வேண்டுமே தவிர, உடைந்து நொறுங்கும் தன்மையை அல்ல.

குறிப்பாக புனேயில் ஸ்பின் பிட்சில் தோல்வி அடைந்தது இந்தியாவின் மோசமான ஆட்டத்தினாலேயே. பெங்களூருவில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக 46 ரன்களுக்கு சிதைந்தனர், ஆஸ்திரேலியாவில் 36 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தனர், ஆனால் அதிலிருந்து மீண்டு தொடரையே வென்றனர்.

இந்தியா தோல்வி அடைந்தது மட்டுமல்ல, நியூஸிலாந்து அணி பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்தியாவை ஊதித்தள்ளியது என்றுதான் கூற வேண்டும். பந்துகள் சுழலும் பிட்சில் இந்தியாவின் பேட்டிங் படுமோசம். தோல்வியை விட அந்தத் தோல்விகளுக்கு ஆற்றிய எதிர்வினை அதை விட மோசமானதும் அனர்த்தமாகவும் ஆகிவிட்டது. என்ன எதிர்வினை எனில் மும்பையில் கோடுகளைக் கிழித்து அதன்படி பந்துகளை ஸ்வீப் ஷாட்களை ஆட பயிற்சி செய்துள்ளதாக தெரிகிறது.

அதே போல் பந்துகள் சுழலும் பிட்ச்களில் சமீபமாக இங்கிலாந்து பேட் செய்யும் விதமும் சிரிப்பை வரவழைக்கின்றன. இரண்டு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி பயிற்சி செய்த விதம் இங்கிலாந்தின் ஸ்பின் பவுலிங்கை ஆடும் விதம் போல் சிரிப்பை வரவழைக்கின்றன. டாப் கிளாஸ் பேட்டர்களுக்கு பிட்சில் கோடு கிழித்து ஆட வேண்டிய தேவையெல்லாம் இல்லை. எந்தப் பந்தை ஆடுவது, எதை ஆடாமல் விடுவது என்பது அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும். எனக்கு ஏற்படும் ஒரே கேள்வி என்னவெனில் புனே டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்களிடமிருந்து ஏன் தீர்மானமான ஒரு கால்நகர்த்தலே இல்லை என்பதே.

பலதரப்பட்ட ஸ்வீப் ஷாட்கள் மீதான இங்கிலாந்தின் தீரா தாபம் நகைப்புக்குரியது. இத்தகைய ஷாட்களால் ஆன பயன் என்ன? பாகிஸ்தானின் 2 ஸ்பின்னர்கள், (நோமன் அலி, சஜித் கான்) 40 விக்கெட்டுகளில் 39 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

ஸ்வீப் ஷாட்டுக்குத் திரும்புவோம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்வீப் பாதுகாப்பானது என்று சொல்லித்தரும் அந்த மடத்தனமான பயிற்சியாளர் யார் என்று கேட்கிறேன். தீர்மானகரமான கால்நகர்த்தல் எங்கே போனது? டெஸ்ட் கிரிக்கெட்டில் அர்த்தமற்ற ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் எவ்வளவு அபாயகரமானது என்பது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் ஆடிய போது வெட்ட வெளிச்சமானது. (2வது இன்னிங்சில் அஸ்வின்).

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்வீப் அபாயகரமானது. ஏனெனில் முன் கூட்டியே தீர்மானித்து ஆடப்படுவது அந்த ஷாட். மாறாக துல்லியமான கால்நகர்த்தல்தான் ஸ்பின் பிட்ச்களுக்கு சரியான நகர்வாக இருக்கும். ஏதாவது ஒன்றிரண்டு வீரர்கள் அனைத்து வகையான ஸ்வீப்களிலும் நல்ல பேட்டராக இருக்கலாம், ஆனால் பெரும்பான்மையானோர் நல்ல கால்நகர்த்தலைத்தான் நம்பியிருப்பார்கள்.

புனேயில் வெள்ளைப்பந்தில் சிறந்து விளங்கும் சாண்ட்னர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார் பேட்டர் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த விதம் ஃபுட்வொர்க் இன்மையைக் காட்டுகிறது. சாண்ட்னர் வீசிய சாதாரண பந்திற்கு அவரது ஃபுட்வொர்க் வேலை செய்யவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக களேபரம், கந்தறுகோலம் ஆன இந்திய பேட்டிங் கடினமான ஆஸ்திரேலியப் பயணத்திற்கு முன்பாக நிகழ்வது பிரச்சனையை இழுத்துப் போட்டுக்கொள்வது போன்றதாகும். இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours