அண்ணாமலை தனிப்பட்ட முறையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – சிங்கை ராமச்சந்திரன்!

Spread the love

“எனது தந்தையான சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜன் இறந்தபோது எனக்கு 13வயது. அவர் எப்படி எனக்கு, எம்எல்ஏ கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கி தரமுடியும். எனது தந்தை குறித்த பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை மக்களவைத் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது. இதே தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மூவரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குறித்தும், அவரது தந்தை குறித்தும் அண்ணாமலை பேசியது சர்ச்சையாகியுள்ளது.

அதாவது,”2002ம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த கோவிந்தராஜன், அவரது எம்எல்ஏ கோட்டாவை பயன்படுத்தி அவரது மகன் சிங்கை ராமச்சந்திரனுக்கு கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்தார். அதே ஆண்டு இரண்டு தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்த நான், மதிப்பெண் அடிப்படையில் கோவை உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். நான் எம்எல்ஏ கோட்டாவில் வரவில்லை. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை” என்று அண்ணாமலை பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிங்காநல்லூர் எம்எல்ஏ கோவிந்தராஜன் இறந்தபோது சிங்கை ராமச்சந்திரனுக்கு 13 வயதுதான். அந்த வயதில் எப்படி கல்லூரியில் எம்எல்ஏ கோட்டாவில் சேரமுடியும். உண்மைக்கு மாறான தகவல்களோடு எப்படி அண்ணாமலை பேசலாம் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோன்று, ஓபிசி இடஒதுக்கீடு வைத்துதான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியானார். அவர் எப்படி கோட்டா பத்தி பேசலாம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்எல்ஏ கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்தார் என்று எனது தந்தையை பற்றி அண்ணாமலை பேசியது உண்மைக்கு மாறான விஷயம். இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய செயல். பாலிடெக்னிக்கில் பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடண்ட் விருது வாங்கி, மதிப்பெண் வைத்துதான் பொறியியல் சீட் எனக்கு கிடைத்தது. அண்ணாமலை சொல்கிறமாதிரி எதுவும் நடக்கவில்லை.

அண்ணாமலைக்காவது கூட அவர் தந்தை வந்தார். எனக்கு அதுகூட நடக்கவில்லை. நான் மட்டுமே வந்து கல்லூரியில் அட்மிஷன் போட்டேன். எனது தந்தை இறந்தபோது, உடலை எடுத்துவரக் கூட எங்களிடம் பணம் இல்லை. அப்போது கடன் வாங்கிதான் உடலை எடுத்து வந்தோம். எனது தந்தை கோவிந்தராஜ், எம்எல்ஏ பதவியில் எந்தளவுக்கு நேர்மையாக இருந்தார் என்று அதிமுகவினருக்கு நல்லாவே தெரியும். அவர் குறித்து அண்ணாமலை இழிவாக, கீழ்தரமாக பேசியது, எனது குடும்பத்தினரையும், கட்சியினரையும் மிகவும் பாதித்துள்ளது. அதனால், கண்டிப்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோல தவறான தகவல்களோடு, தனிப்பட்ட முறையில் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours