என்ஐஏ விசாரணைக்கு அஞ்ச மாட்டோம் – சீமான்!

Spread the love

என்ஐஏ விசாரணையை கண்டு நாம் தமிழர் கட்சி அஞ்சாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

கடந்த 2017 ம் ஆண்டு சேலம் மாநகர், அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய சீமான், நெய்தல் படை அமைத்து அதன் மூலம் 15,000 பேருக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுப்பேன் என பேசியிருந்தார்.

இதனையடுத்து, அவர் மீது வன்முறையைத் தூண்டும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜராகச் சீமான் சேலம் நீதிமன்றத்திற்கு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “என் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து எங்களுக்குப் பணம் வருவதில்லை என்பது தெரிகிறது. அதன் காரணமாக என்ஐஏ மூலம் சோதனை நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதம் செய்ய முயன்றதாக யாரோ 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறு செய்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர். அந்த வழக்கில் 2 ஆண்டுகள் கழித்து, தற்போது என்ஐஏ சோதனை செய்தது ஏன்?. தேர்தலில் என்னை எதிர்கொள்ள முடியாமல், இந்த சோதனை நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியிருக்கின்றனர். இந்த விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம். நாம் தமிழர் கட்சியை யாராலும் உடைக்க முடியாது. கட்சி என்ன பென்சிலா?. நான் உயிருடன் இருக்கும் வரை லட்சியம் இருக்கும், லட்சியம் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி இருக்கும். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்” என்று தெரிவித்தார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours