நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது நடவடிக்கை எடுக்காத குஷ்பு, த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பது ஏன் என எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருவர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார்.
அவருக்குப் பதிலளித்த குஷ்பு, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால், என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்ணைத் திறந்து பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களைக் கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு நடிகை குஷ்புவுக்கு எதிராக கடும் எதிர்ப்புக்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்திலும் நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் நாளை மாலை 5 மணிக்குள் நடிகை குஷ்பு பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும். அவர் தமிழகமெங்கும் நடமாட முடியாது என கூறியிருந்தார்.
இதனையடுத்து நடிகை குஷ்புக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததால், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 33 பெண் காவலர்கள் உட்பட 36 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினர் நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்ததன் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும், தற்போது அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் நடிகை குஷ்பு வீட்டிற்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours