தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என்மண் என் மக்கள்” பிரச்சாரப் பயணத்தினை தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறுத் தொகுதிகளில் நடத்தி வருகிறார். அதன்படி இன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு இடங்களில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இதற்காக, சேலம் மாவட்டம் மேச்சேரி பிரச்சாரத்தை முடித்துவிட்டு பொம்மிடி வழியாக அவர் வருகை தந்தார். வழியில் புகழ்பெற்ற பி.பள்ளிப் பட்டியில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள லூர்து அன்னை சிலைக்கு மாலை அணிவிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக மாலை 5.50 மணிக்கு வருகை தந்த அவர், ஆலயத்தின் வழியாக அன்னை மாதாவின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என இடைமறித்து தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர் ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களை கொன்று குவித்ததற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும், இது புனிதமான இடம் எங்கள் தேவாலயங்களை இடித்த நீங்கள் மாலையிடக்கூடாது என்றும், அங்கேயும் உங்கள் ஆட்சிதானே நடக்கின்றது என்றும் தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர்களிடம் பதிலளித்த அண்ணாமலை அங்கு நடந்தது இரு பழங்குடியினர் இடையே நடந்த தகராறு என்று விளக்கம் அளித்தார்.
“இலங்கையில் 2009-இல் கலவரம் நடந்தது. அதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்தனர். அப்பொழுது யாரும் கேள்வி கேட்கவில்லை தற்போது, சம்பந்தமே இல்லாமல் பேசக் கூடாது.சர்ச் வர அனைவருக்கும் உரிமை உள்ளது. இன்னும் 10,000 பேரை கொண்டு வந்து தா்ணா நடத்தினால் நீங்கள் எதுவும் செய்ய முடியாது” என்றார். இருத ரப்பு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர்களை போலீசார் விலக்கி தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் லூர்து அன்னை சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து வணங்கி சென்றார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் வெளியேறு,வெளியேறு என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
+ There are no comments
Add yours