சென்னை புழல் சிறை ஊழல்கள்: விசாரணைக்கு ஆணையிடுக! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Spread the love

சென்னை புழல் சிறை ஊழல்கள் நடைபெறுவதாகவும், கையூட்டு (பணம்) தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது சிறைவாழ்க்கை கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு நினைத்தாலும் சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரை செய்வதற்கு ஊழல் நடத்தப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க 50,000 ரூபாயும், உள்நோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ. 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் அங்குள்ள மருத்துவக் குழுவினரால் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது என்று ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கையூட்டு தருவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத கைதிகள் உண்மையாகவே கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சிறைக்கு வெளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. கையூட்டு தர வழியில்லாததால், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த பல கைதிகள், சரியான நேரத்தில் உரிய மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் வேதனையளிக்கிறது.

சிறைகளில் தேவைப்படுவோருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதி கையூட்டு தராததால் மறுக்கப்படுவதும், கையூட்டு கொடுப்பதால் மருத்துவமே தேவைப்படாத பலர் வெளி மருத்துவமனைக்கு சென்று அனைத்து வசதிகளுடன் தங்கியிருப்பதும் சட்டத்தையும், அறத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். சிறைகளில் கைதிகளை மனு போட்டு பார்ப்பதில் தொடங்கி, தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக பெறுவது வரை அனைத்திலும் கையூட்டு தலைவிரித்தாடுகிறது என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், உயிர்காக்கும் மருத்துவம் அளிப்பதைக் கூட கையூட்டு (ஊழல்) தான் தீர்மானிக்கிறது என்பதையும், கையூட்டு தருவதற்கு வசதி இல்லை என்பதாலேயே வாழ வேண்டிய பலர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகில் இதை விட கொடிய மனித உரிமை மீறல் இருக்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

புழல் மத்திய சிறையில் கையூட்டு தர மறுத்ததால், மருத்துவ வசதி மறுக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர்? வெளி மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க கையூட்டு வசூலிக்கும் வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது? இந்த நடைமுறையால் சட்டவிரோதமாக பயனடைந்தவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours