திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 17,18ஆகிய தேதிகளில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறிய நிலையில், மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல இடங்களுக்கு நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 6000 ரூபாயும், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் தலா 1000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசு குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து பற்றிய கேள்விக்கு, “ஆளுநர் வாரத்திற்கு ஒருமுறை டெல்லிக்கு சென்று வருகிறார். அப்படி செல்லும் போது தயவு செய்து டெல்லியில் வாதாடி, போராடி தேவையான நிதியை வாங்கிக் கொடுத்தால் அவருக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருப்போம்” என்று பதிலளித்தார்.
மத்திய அரசின் நிதி பற்றிய கேள்விக்கு, “இயற்கை பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. அதன்படி தமிழகத்தின் SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் 75 சதவிகிதத்தை அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 சதவிகிதத்தை அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும்” என்று விவரித்தார்.
NDRF-இல் இருந்து இதுவரை தமிழகத்திற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற முதல்வர், ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல என்றும் கூறினார்.
சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும், ஒன்றிய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று விவரித்த முதல்வர், “சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் 1500 கோடி ரூபாய்க்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. இன்று இங்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும், பணிகளுக்கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்” என்று கூறியுள்ளார்.
பொன்முடிக்கு தண்டனை : உச்ச நீதிமன்றத்தில் எப்போது மேல்முறையீடு? – வெளியான புதுத் தகவல்!
இதுமட்டுமின்றி, சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும் என்ற முதல்வர், சென்னை மற்றும் தென் மாவட்ட பேரிடர்களை கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு NDRF-இல் இருந்து கோரப்படுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
+ There are no comments
Add yours