வெறிநோய் தடுப்பூசி முகாம் மூலம் 121 நாட்களில் 93 ஆயிரம் தெருநாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மாநகராட்சி ஆணையர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறை மற்றும் கால்நடை மருத்துவப் பிரிவு சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் கடந்த 27-ம் தேதி ராயபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாமில் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 5 சிறப்பு நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூலம் அனைத்து மண்டலங்களிலும் 121 நாட்களில் 93 ஆயிரம் தெருநாய்களுக்கு தடுப்பூசியும், அகப்புற ஒட்டுண்ணி நீக்க மருந்தும் செலுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ராயபுரத்தில் நடைபெற்ற முகாமில் இதுவரை 303 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 27-ம் தேதி இரவு வியாசர்பாடி எம்.கே.பி நகரில் நாய் ஒன்று 7 பேரை கடித்தாக புகார் வந்ததையடுத்து, அன்றிரவே அந்த நாயானது, குட்டிகளுடன் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டது. பின்னர் புளியந்தோப்பு நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில், பிடிபட்ட நாய்க்கு வெறிநோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. எனினும் தொடர்ந்து 10 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளது. அதை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாய்கள் கணக்கெடுப்பணி மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
+ There are no comments
Add yours