தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலிக்கக்கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்..
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கடந்த சில மாதங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது மாநிலம் என்ற பெருமையை கர்நாடகம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், கர்நாடகத்தில் 2006 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பாக அறிவிக்கை செய்யப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு,
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 11,300 பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும்.
பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் இந்த தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.
ஆனாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள்,
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனாலும் கூட அதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல் தமிழக அரசு செயல்படுகிறது. வாழ்நாளின் பெரும் பகுதியை அரசுப் பணிகளில் கழித்தவர்கள்,
அவர்களின் பணி ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஓய்வூதியம் வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திடுக” எனத் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours