தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் விழுந்து உறுமிக் கொண்டிருந்த சிறுத்தை, வனத்துறையினர் மீட்புப் பணியை தொடங்கும்போதே எம்பிக் குதித்து ஓட்டம் பிடித்தது.
பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதன். இவரது விவசாய நிலத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் இருந்து நேற்று பகலில் உறுமல் ஓசை கேட்டுள்ளது. இதையறிந்த கிராம மக்கள் நேரில் சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் தண்ணீர் மட்டத்துக்கு மேலே பாறை இடுக்கு ஒன்றில் ஒரு சிறுத்தை படுத்திருப்பது தெரிய வந்தது. தவறி கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை மேலே ஏறி வரமுடியாத நிலையில் பாறை இடுக்கில் தஞ்சமடைந்திருந்தது.
எனவே, இதுகுறித்து வனத் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினரின் உதவியுடன் சிறுத்தையை கிணற்றில் இருந்து மீட்க தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். இதற்கிடையில், மீட்புக் குழுவினர், கிராம மக்கள் என கிணறு அருகே கூட்டம் திரண்ட நிலையில் அந்த சிறுத்தை சுமார் 15 அடி ஆழத்தில் இருந்து கிணற்றுக்கு வெளியே எம்பிக் குதித்து வனத்தை நோக்கி ஓட்டம் எடுத்தது.
இதை எதிர்பாராத மீட்புக் குழுவினர் சற்று நேரம் திகைப்பில் ஆழ்ந்தனர். இருப்பினும் சிறுத்தை விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்குள் நுழைந்து வனத்தை நோக்கி ஓடியதால் அது வனத்துக்குள் தான் செல்கிறதா அல்லது வேறு எங்காவது பதுங்குகிறதா என்பதை அறிய சிறுத்தை பயணிக்கும் வழியை பின்பற்றி கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கினர். மேலும், சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் கூறும்போது, ‘கிணற்றுக்குள் விழுந்தது இளம் வயதுடைய சிறுத்தை. திடீரென அது வெளியேறி ஓடிவிட்டதால் அதன் வயது, பாலினம் போன்றவற்றை முழுமையாக அறிந்திட முடியவில்லை. உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி, அந்த சிறுத்தை அடர்வனப் பகுதிக்கு செல்லும் வரை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
+ There are no comments
Add yours