நடிகர் அஜித் சீக்கிரம் கட்சி ஆரம்பிப்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். எதிர்த்து நிற்கும் கட்சிகள் அனைத்தும் டெபாசிட் தொகையை இழப்பார்கள் என்று ஈரோட்டில் தமிழ்நாடு காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் அஜித் சீக்கிரம் கட்சி ஆரம்பிப்பார் என்று சொல்லியும் அதிரடி கூட்டியுள்ளார்.
அவர் பேசும்போது, ”சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தலைவர் செல்வப் பெருந்தகை பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானது. தற்போது கருத்து முரண்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது. கட்சியினரிடையே எந்த கருத்து மாறுபாடுகளும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தொடரும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். எதிர்த்து நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள். காங்கிரஸ் தலைவர்கள் திமுக வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்” என்றார்.
விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கேட்டபோது, “ஆரம்பத்தில் விஜய் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அவர் ஆரம்பித்து விட்டார். அதுபோல, அஜித்தும் சீக்கிரம் ஆரம்பித்து விடுவார். பொது மேடையில் அமித்ஷா தமிழிசையிடம் நடந்து கொண்ட விதம் தவறானது.
கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்திருந்தால் அதை தனி அறையில் பேசி இருக்கலாம். ஒரு மிகப்பெரிய காங்கிரஸ் தலைவரின், இலக்கியவாதியின் மகளான தமிழிசையை அவர் கண்டித்த விதமும், தமிழச்சியை அவமானப்படுத்தியதும் தவறு” என்று கூறினார்.
+ There are no comments
Add yours