‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ – ஜனவரி 13ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

Spread the love

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழாவை வரும் 13ம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன.17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2023-2024-ம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவினை நடத்திட ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஜன.2 சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது.

18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்திட தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும் எனவும், ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours