டிஜிட்டல் மயமாகும் சென்னை மாநகராட்சி

Spread the love

சென்னை: சென்னை மாநகராட்சியின் தகவல் தொடர்பு கட்டமைப்பை ரூ.9 கோடியே 30 லட்சம் செலவில் அனலாக் முறையில் இருந்து நவீன டிஜிட்டல் முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் புயலும், பெருவெள்ளமும் எப்போதாவது நிகழும் பேரிடராக இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக அது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. முந்தைய பேரிடரை விட, அடுத்து வரும் பேரிடர், அதை விட பயங்கரமாக இருக்கிறது. முந்தைய பேரிடர்களில் கற்ற படிப்பினைகளின் படி செயல்பட்ட முற்பட்டால், அடுத்த பேரிடர் வேறு வகையில் வித்தியாசமாக அமைந்துவிடுகிறது.

இத்தகைய காலகட்டங்களில் தரைவழி தொலைபேசி, செல்போன் சேவைகள் முற்றிலும் செயலிழந்துவிடுகின்றன. இதனால் மாநகராட்சி நிவாரணப் பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் கம்பியில்லா தொலைத்தொடர்பு கட்டமைப்பை பயன்படுத்தி வருகிறது. தற்போது பயன்படுத்தப்பட்டு வருவது அனலாக் முறையிலானது.

இந்த சேவையை தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்று, வாக்கி டாக்கி மூலமாக தொடர்புகொண்டு பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த சேவையில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகின்றன. பிறரை தொடர்புகொள்வதில் சிக்கல்கள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவை கட்டமைப்பை டிஜிட்டல் முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இது நாள் வரையில் மாநகராட்சியின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவை தனியாரிடம் இருந்து பெறப்பட்டு வந்தது. தற்போது மாநகராட்சியின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவையை நவீனமாக்கும் திட்டத்தின் கீழ், அதற்கான கட்டமைப்பை மாநகராட்சி நிர்வாகமே சொந்தமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக ரூ.9 கோடியே 30 லட்சம் செலவில் கட்டமைப்புகளை, காவல்துறை உதவியுடன் ஏற்படுத்திக்கொள்ள இருக்கிறது.

இதன் கீழ், மத்திய அரசிடம் 10 இணை அலைவரிசைகளை மாநகராட்சி வாங்க இருக்கிறது. மேலும், 10 இடங்களில் டவர்களையும் நிறுவ உள்ளது. புதிதாக 1,200 வாக்கி டாக்கிகளும் வாங்கப்பட உள்ளன. தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக காவல்துறையிடமிருந்து 6 அலுவலர்களும் அழைக்கப்பட உள்ளனர். இதன் மூலம் மாநகராட்சியின் தகவல் தொடர்பு வலிமை பெறும். பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours