சென்னை: சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்படும் மஹாவிஷ்ணு என்பவர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். மாணவிகள் மத்தியில் உத்வேகப் பேச்சு வழங்க வந்தவர் பாவ, புண்ணியம், முன்ஜென்ம பலன்கள் பற்றி பேசினார். மேலும் மாற்றுத்திறனாளியாகப் பிறக்க முன்ஜென்ம பாவ வினைகளே காரணம் என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும் அந்த வீடியோவில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளியின் ஆசிரியருடன் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபடுவதும் பதிவாகியிருந்தது. மாற்றுத்திறனாளியான அந்த ஆசிரியருடன் அவர் வாக்குவாதம் செய்தது இணையவெளியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை பள்ளியின் முன்னாள் பல்வேறு மாணவர் சங்கங்களைச் சேர்ந்தோரும் திரண்டு, ‘பள்ளியில் பிற்போக்குத்தனமான உரையை அனுமதிப்பதா’ என கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து பள்ளியில் மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வது குறித்து அறிவுரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என்றார்.
முன்னதாக ஊடகப் பேட்டியில் பள்ளியின் தலைமை ஆசிரியை, “பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்படவில்லை. அது மாணவிகளுக்கு உத்வேகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் ஆவேசம்: பொதுத் தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக பள்ளி மாணவிகள் மத்தியில் உரையாற்றிவிட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நிகழ்ச்சிக்கு யார் ஏற்பாடு செய்தது? யாரிடம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் சங்கர் தனது அறிவுக்கண் கொண்டு அந்த நபரை கேள்வி எழுப்பியதை நான் பாராட்டுகிறேன். அவர் அந்த நபர் மீது புகார் கொடுத்தால் நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆனால், ஆசிரியர் சங்கர் மறப்போம், மன்னிப்போம் எனக் கூறியுள்ளார். இருப்பினும் எனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அரசுப் பள்ளிக்குள் வந்து எனது ஆசிரியரை அவமானப்படுத்திய நபரை நான் சும்மா விடப்போவதில்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசமாகக் கூறினார்,
இந்நிலையில்தான், சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
+ There are no comments
Add yours