கும்பகோணம்: தமிழகத்தில் 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் முதல்வர் கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வரவேற்றார்.
விழாவில், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 12,525 கிராமஊராட்சிகளுக்கு ரூ.86 கோடியில்விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 13 மாவட்டங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் கோப்பைக்கு கடந்த ஆண்டு 6.71 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டு 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், முதல்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசுத் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் விரைவில் பணி வழங்கப்பட உள்ளது. கும்பகோணத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வளையப்பேட்டையில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலை மற்றும் நூலகம், மாங்குடியில் மொழிப்போர் தியாகி ரத்தினம் சிலை ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இதில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி.எஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் கருணாநிதி சிலையை அமைச்சர் உதயநிதிதிறந்துவைத்தார். அவர் பேசும்போது, “தமிழகத்தின் முக்கால் நூற்றாண்டுகால அரசியலைத் தீர்மானித்தவர், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது வழியில்முதல்வர் ஸ்டாலின் சிறப்பானஆட்சியை தருகிறார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சிலஇடங்களில் குறைகள் உள்ளன. விரைவில் அவை சரி செய்யப்பட்டு, தகுதியுடைய அனைவருக்கும் வழங்கப்படும்” என்றார்.
+ There are no comments
Add yours