எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோன்னு சொல்ல தோணுகிற வகையில் ’இந்தியன்2’ படத்தில் நடித்து வந்த நடிகர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பும் வருட கணக்கில் நீ…ள்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டப் பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன்2’. இந்தப் படம் கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே கிரேன் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஆரம்பித்தது மரண ஓலம். இந்த கொடூர விபத்து காரணமாக படப்பிடிப்பு கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு, கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் படக்குழுவுக்கும் பிரச்சினைகள் ஏற்பட படத்தை கைவிடும் நிலை வரை சென்றது. இதற்கடுத்து சமாதான பேச்சுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
இதற்கிடையில் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து கொண்டிருந்த நடிகர் விவேக் திடீர் மரணம் மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் நடிகர் நெடுமுடிவேணு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இரண்டு முக்கிய நடிகர்களின் இழப்பு ’இந்தியன் 2’ குழுவுக்கு பேரிடியாக விழுந்தது. புதிய தொழில்நுட்பத்தை வைத்து இவர்களின் கதாப்பாத்திரங்களையும் திரையில் கொண்டு வர ஷங்கர் திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதன் பின்னரும் படப்பிடிப்பு நீண்ட நிலையில், நடிகர் மனோபாலாவும் உயிரிழந்தார். கடந்த மே மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்த நான்கு மாதங்களில் தற்போது நடிகர் மாரிமுத்துவும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரும் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கதாப்பாத்திரங்களில் வேறு யார் நடிக்கப் போகிறார்கள், இவர்கள் சம்பந்தமான காட்சிகள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது, இயக்குநர் ஷங்கர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
‘இந்தியன்2’ படம் ஆரம்பித்ததில் இருந்தே இதுபோன்ற எதிர்மறையான சம்பவங்கள் நடந்து வருவது படத்திற்கு ராசியே இல்லை எனவும் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருவது படக்குழுவினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
+ There are no comments
Add yours