மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டது. யாகசாலையில் வைப்பதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் தொடங்கின.
புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி கோபுர கலசத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட மயூரநாதர் கோவலில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால் மயிலாடுதுறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
+ There are no comments
Add yours